×

திருப்பதி மலைப்பாதையில் திடீர் மழை லாரி, வேன், டூவீலர்கள் உள்பட 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: ஆயில் கசிவால் ஏற்பட்ட விபத்து

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பெய்த திடீர் மழையால் காஸ் லாரி, 3 டிராவல்ஸ் வேன்கள், 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் என 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. வாகனங்களில் ஏற்பட்ட ஆயில் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று மாலை திடீரென கோடை மழை பெய்தது. தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரக்கூடிய முதலாவது மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்களில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. மழை பெய்ததாலும் ஆயில் கசிவு காரணமாகவும் அவ்வழியாக சென்ற பல இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இதேபோல் 3 டிராவல்ஸ் வாகனங்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. அப்போது ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் தயார் செய்வதற்காக காஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி திருப்பதி நோக்கி வந்தது. டிராவல்ஸ் வாகனம் காஸ் டேங்கர் லாரி மீது மோதியது. கேஸ் டேங்கர் லாரியில் காலியாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

நேற்று ஒரேநாளில் லாரி, வேன், டூவீலர்கள் உட்பட சுமார் 15 வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இதனையடுத்து தேவஸ்தான விஜிெலன்ஸ் அதிகாரிகள் மலைப்பாதையில் அதிவேகமாக செல்வதை குறைத்து கொண்டு மெதுவாக செல்ல வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய டிராவல்ஸ் வாகனங்களில் இருந்த பக்தர்கள் பேருந்துகள் மூலம் திருப்பதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும், காயமடைந்த பக்தர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சாலையில் ஆங்காங்கே கசிந்திருந்த ஆயிலை ரசாயனம் கொண்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ் நிலைதடுமாறி அங்குள்ள முட்புதரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு அதில் இருந்த 36 பயணிகளும் லேசான காயத்துடன் தப்பியது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதி மலைப்பாதையில் திடீர் மழை லாரி, வேன், டூவீலர்கள் உள்பட 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: ஆயில் கசிவால் ஏற்பட்ட விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati hill ,Tirumala ,Tirupati mountain pass ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...